×

அரசு ஆவணங்களை பதுக்கிய விவகாரம்; அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீண்டும் கைதாகிறார்: மியாமி நீதிமன்றத்தில் ஆஜர்

மியாமி: அரசின் ரகசிய ஆவணங்களை வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பாக மியாமி நீதிமன்றத்தில் ஆஜராகும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கைதாக உள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், அவரது பதவிக்காலம் முடிந்து வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிய போது 100க்கும் மேற்பட்ட அரசின் ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக குற்றம்சாட்டப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புளோரிடாவில் உள்ள டிரம்ப் வீட்டில் எப்பிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி பல்வேறு ரகசிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

இந்த விவகாரத்தில் டிரம்புக்கு எதிராக மியாமி நீதிமன்றத்தில் கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அமெரிக்காவில் கிரிமினல் குற்றச்சாட்டு பதியப்பட்ட முதல் முன்னாள் அதிபர் டிரம்ப். இவர் மீதான 37 குற்றச்சாட்டுகள் குறித்து மியாமி நீதிமன்றத்தில் ஜூன் 13ம் தேதி (இந்திய நேரப்படி இன்று அதிகாலை) ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. இதற்காக புளோரிடாவில் இருந்து நேற்று மியாமிக்கு தனி விமானத்தில் டிரம்ப் வந்தார். நீதிமன்றத்தில் ஆஜராகும் முன்பாக டிரம்ப் கைது செய்யப்படுவார் என தெரிகிறது. ஏற்கனவே, கடந்த ஏப்ரல் மாதம் பாலியல் நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த டிரம்ப் கைதானார்.

அதே போல இந்த முறையும் அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்படுவார் என கூறப்படுகிறது. ஆனாலும், கிரிமினல் குற்றச்சாட்டில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். 2024 அதிபர் தேர்தலில் போட்டியிட டிரம்ப் தீவிரமாக முயற்சிக்கும் சமயத்தில் இந்த வழக்கு விசாரணை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

The post அரசு ஆவணங்களை பதுக்கிய விவகாரம்; அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீண்டும் கைதாகிறார்: மியாமி நீதிமன்றத்தில் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : US ,President Trump ,Miami ,Former ,President Donald Trump ,Dinakaran ,
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்